மதுபாரை பாட்டிலால் அடித்து நொறுக்கி ரகளை செய்த ‘டாடி’ஆறுமுகத்தின் மகன் தலைமறைவு - போலீசார் வலைவீச்சு
வித்தியாசமான அசைவ உணவு செய்து பிரபலமானவர்தான் டாடி ஆறுமுகம். இவர் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்றவர். இந்நிலையில், இவரது மகன் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மதுபாரை சூறையாடி ரகளை செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படையினர் தேடி வருகிறார்கள். ஏழ்மை நிலையில் இருந்த ஆறுமுகம் தனது மகன் கொடுத்த யோசனையால், யதார்த்தமாக ‘வில்லே புட் பேக்டரி’ என்ற யூடியூப் சேனல் தொடங்கினார். அந்த யூடியூப் சேனலில் அசைவை உணவு சமைக்கும் வீடியோவை பதிவிட்டு வந்தார்.
இவர், வித்தியாசம், வித்தியாசமாக சமையல் செய்து வெளியிட்ட ஒரு வீடியோவே பல லட்சங்களை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. இதனையடுத்து, அவர் தொடர்ந்து வீடியோவை பதிவிட்டு வந்தார். ஒவ்வொரு வீடியோவும் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் புகழின் உச்சிக்கே சென்றார் ‘டாடி’ ஆறுமுகம்.
இதனால், பணமும் அதிகம் வந்து சேர்ந்தது. பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ள ‘டாடி’ ஆறுமுகம் புதுச்சேரியில் காமராஜர் சாலை இந்திரா சிக்னல் ஏரியாவில் ‘டாடி ஆறுமுகம் பிரியாணி’ என்ற ஓட்டலை நடத்தி வருகிறார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அசைவ ஓட்டல்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ‘டாடி’ ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் (33). இவர்தான் ஓட்டல்களை கவனித்து வருகிறார். இந்த ஓட்டலில் ஜெயராம் (25), ராஜேஷ் (25), மோகன் (28), தாமு (32) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரும் கடந்த 21ம் தேதி அன்று இரவு ஏ.கே.டார்வின் ஓட்டலுக்கு சென்று அங்கிருக்கும் மதுபாரில் மது அருந்தினார்கள். போதையில் குத்தாட்டம் போட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
பார் ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசியும் உள்ளனர். இரவு 11 மணிக்கு மேல் பார் மூட விடாமல் குடித்துக்கொண்டே ரகளை செய்துள்ளனர். பீர் பாட்டில்களை அடித்து, உடைத்து வீசியதில் ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனையடுத்து, முத்தியால் பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்க, 5 பேரும் வெளியேறி உள்ளனர். வெளியே வந்து போதையில் நடக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டே அலப்பறை கொடுத்துள்ளனர்.
அப்போது, முத்தியால் பேட்டை ஏட்டு மோகன் வந்து, ஏன் இப்படி ரகளை செய்கிறீர்கள் என்று கேட்க, ஓ.சி.யில் பிரியாணி வாங்கித்தின்னும் நீ எப்படி கேட்கலாம்? என்று கேட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதையெல்லாம் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற போலீசார் வருவதற்குள் 5 பேர் தலைமறைவாகிவிட்டனர். 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான ஆறுமுகத்தின் மகன் உள்ளிட்ட 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.