தள்ளுவண்டியில் கிடந்த 5 வயது சிறுவனின் சடலம் - பட்டினியால் இறந்த சோகச் சம்பவம்
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அச்சிறுவன் பட்டினியால் இறந்தபோனதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.
விழுப்புரம், மேல்தெரு என்ற இடத்தில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரமாக நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை வந்து பார்த்தபோது, தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தான்.
இதனால், அவர் அக்கம், பக்கத்தினரிடம் கூறினார். அக்கம் பக்கத்தினர் சிறுவன் தூங்குகிறான் என்று நினைத்து, அந்தச் சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால், சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர். இது குறித்து, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தையின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டனர்.
அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்தனர். குழந்தையில் உடலில் எந்த காயமும் கிடையாது. இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில், இந்த குழந்தை உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் இறந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இது யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அந்தக் குழந்தைக்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.