திடீரென 400 பேர் மயக்கம் - விடிய விடிய போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் - நடந்தது என்ன?

Struggle samugam-400-people-fainted
By Nandhini Dec 18, 2021 06:50 AM GMT
Report

தனியார் தொழிற்சாலை விடுதியில் வழங்கிய தரமற்ற உணவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 8 பேரின் நிலைமை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று பெண் தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

குறிப்பாக, ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இங்கு அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இதனால் பல தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறது.

இந்நிலையில், ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவினால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனையடுத்து, உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திரும்பவே இல்லை. அவர்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

அவர்கள் குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், நிர்வாகிகள் மழுப்பி பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.