பாதாள அறையில் உணவு, குடிநீர் வசதியுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 இளம்பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்
பாதாள அறையில் உணவு, குடிநீர் வசதியுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 இளம்பெண்களை போலீசார் மீட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் டான்ஸ் பார்கள் என்ற பெயரில், பெண்கள் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகள் செயல்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2005ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஆபாச நடன விடுதிகளில் ஆபாச செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்ததையடுத்து, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த மாநில அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநிலத்தில் மீண்டும் டான்ஸ் பார்ங்கள் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. ஆனால், கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது. அரசின் கட்டுப்பாடுகளை மீறி பல இடங்களில் டான்ஸ் பார்கள் செயல்பட்டு வந்துள்ளன. இது தொடர்பாக புகார்கள் போலீசாருக்கு வந்துக் கொண்டிருந்தது.
மும்பை அந்தேரி பகுதியில் இயங்கி வரும் தீபா மதுமான விடுதியில் கட்டுப்பாடுகளை மீறி பெண்கள் நடனம் நடைபெற்று வந்துள்ளது. மேலும், சட்டவிரோத செயல்கள் நடந்து வருவதாகவும் சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அந்த பாரில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். ஆனால் புகாரில் இருந்தபடி அங்கே எந்த இளம் பெண்கள் இல்லை என்று தெரியவந்தது. ஆனாலும் அந்த பார் ஊழியர்களிடம் பல மணி நேரம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
பாரில் நடன பெண்கள் யாரும் கிடையாது என்று அவர்கள் ஆணித்தரமாக அடித்துக் கூறினர். இங்கு நடன பெண்கள் இல்லாமல் இத்தனை புகார்கள் வராதே? ஏதோ மர்மம் உள்ளது என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.
அதிகாலையில் சமூக குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அங்கு சென்று மீண்டும் ஆய்வு நடத்தினார்கள். அப்போது, பாரில் இருந்த ஒரு அறையில் சந்தேகத்திற்கிடமாக பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அந்த கண்ணாடியை உடைத்ததும் அதற்கு பின்புறம் சிறிய கதவு ஒன்று இருந்தது. அந்த கதவை திறந்து பார்த்தபோது குறுகிய பாதை ஒன்று சென்றது.
அதற்குள் பாதாள அறை அமைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அறைக்குள்ளேயே அதிக நேரம் இருக்க வேண்டுமென்பதற்காக குளிர்சாதன வசதி, குடிநீர் வசதி, தேவையான உணவு குளிர்பானங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அப்போது, அந்த அறையில் இளம் பெண்கள் இருந்தனர்.
அவர்களை போலீசார் வரச் சொல்லவும், கோழி கூண்டில் அடைபட்டிருந்த கோயில் கதவு திறந்து விட்டது போல ஒவ்வொருவராக தட்டு தடுமாறி மேலே வந்தனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த பார் மேலாளர், 3 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அந்த பாருக்கு போலீசார் சீல் வைத்தனர்.