திருத்தணி கோயில் சிசிடிவியை மறைத்த 2 அர்ச்சகர்கள் பணியிட மாற்றம் - உறுதி செய்த அமைச்சர் சேகர்பாபு

samugam
By Nandhini Nov 21, 2021 06:28 AM GMT
Report

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணி கருதப்படுகிறது. ஐந்தாம்படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றி வருகிறது.

இந்த கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இருந்தாலும், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் விஐபிகளிடம் பணம் வாங்கி கொண்டு நேரடியாக சன்னிதானத்திற்குள் அழைத்துச் செல்வதாக புகார் எழுந்து வருகிறது. அந்தப் புகாரை உறுதி செய்யும் விதமாக அண்மையில் ஒரு வீடியோ வெளியானது.

இரு வாரங்களுக்கு முன்பு மூலவர் சன்னிதானத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவை அர்ச்சகர்கள் 2 பேர் துணியை கொண்டு மறைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அவர்கள் ஏன் கேமராவை மறைத்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் விஐபிகள் தரிசனத்திற்காகவே சிசிடிவியை மறைத்ததாகவும், இது நீண்ட நாட்களாகவே நடைபெறுவதாகவும் ஒரு சிலர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரவி விவகாரம் பெரியதானதால் அர்ச்சகர்கள் தரப்பில், ஆகம விதிகளின்படி பிரஸ்தார பூஜையின்போது மூலவர் சன்னிதானத்தை மறைக்க சிசிடிவி கேமராக்களை மறைப்பது வழக்கம் என்று கூறப்பட்டது.

ஆனால் நேற்று திடீரென்று அந்த 2 அர்ச்சகர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனை அமைச்சர் சேகர்பாபு உறுதி செய்துள்ளார். விசாரணையில் தவறு உறுதியானால், பாரபட்சமின்றி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.