வேளாண் சட்டம் வாபஸ் : களத்தில் உயிர் நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர் வீசும். – சு.வெங்கடேசன் எம்.பி
விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு, மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர்- 25ம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து, சு.வெங்கடேசன் எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு. மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது. போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு வலுசேர்த்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றிகள் பல. களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும்.’ என பதிவிட்டுள்ளார்.