கோவை மாணவி தற்கொலை சம்பவம் - மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக மாநில குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள், மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோவையில் கடந்த வாரம் ஆசிரியர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், மாநில குழந்தைகள் நல ஆணையம் கோவையில் விசாரணையை துவங்கி இருக்கிறது. இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது.
மாணவியின் பெற்றோர், உடன் பயின்ற மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த விசாரணையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில், மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாகவும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.