'ரெய்டு ' நடத்த வந்த சி.பி.ஐ. அதிகாரிகளை கடுமையாக தாக்கிய கிராமவாசிகள்
ஒடிசாவில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை தொடர்பாக விசாரணை நடத்த வந்த சி.பி.ஐ. அதிகாரிகளை கிராம வாசிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக 83 பேர் மீது, 23 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய 14 மாநிலங்களில் 76 இடங்களில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளை நடத்தினார்கள்.
இந்நிலையில், நேற்று ஒடிசா மாநிலம் தன்கனால் மாவட்டத்தில் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் சோதனை நடத்த முயற்சி செய்தனர். அப்போது, இதற்கு அப்பகுதி உள்ளூர் கிராமவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சோதனை செய்ய விடாமல் தடுத்ததுடன் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள். உடன் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கிராமவாசிகளிடமிருந்து சி.பி.ஐ., அதிகாரிகளை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றார்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.