சொந்தபந்தம் இருந்தும், அன்பாக கவனித்த ரிக்ஷா காரருக்கு சொத்தை எழுதி வைத்த மூதாட்டி - நெகிழ்ச்சி சம்பவம்
சொந்த பந்தம் எல்லாம் இருந்தும் அனாதை போலவே பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கையில் ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது குடும்பத்தில், தனது கணவருக்கும் தன்னையும் தொடர்ந்து கவனித்து வந்ததாலும், உதவி செய்து வந்ததாலும் தனது சொத்துக்கள் அனைத்தையும் ரிக்ஷா காரருக்கு எழுதி வைத்திருக்கிறார் ஒரு மூதாட்டி. இந்த நெகிழ்ச்சி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம், தாஹத் பகுதியைச் சேர்ந்தவர் மினாடி பட்நாயக் . இவரது கணவர் கிருஷ்ணகுமார் பட்நாயக். இவர் கடந்த ஆண்டு உயிரிழந்து விட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து வந்த மூதாட்டியின் மகள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். மூதாட்டி மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த மூதாட்டிக்கு நிறைய நகைகள், 3 அடுக்கு மாடி, சொத்துக்கள் இருந்தும் உறவினர்கள் யாரும் அவருக்கு உதவி முன் வரவில்லை. இதனால், மூதாட்டி வேதனையில் இருந்து வந்துள்ளார். ஆனால் ஆறுதலாக இருந்து உதவிகள் செய்து வந்துள்ளார் ஒரு ரிக்ஷாக்காரர்.
மூதாட்டியின் கணவருக்கு கடந்த 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஒட்டி வந்திருக்கிறார் புத்தா சமால். அவரும், அவர் குடும்பத்தினரும் தான் மினாடி பட்நாயக் வீட்டிற்கு உதவிகள் செய்து வந்திருக்கிறார்கள். தற்போதும் அவர்கள்தான் மூதாட்டியை கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.
இதனால் ஒரு முடிவெடுத்த அந்த மூதாட்டி, தன்னிடம் இருந்த நகைகளை அந்த ரிக்ஷாகாரருக்கு கொடுத்துள்ளார். மேலும், 3 அடுக்குமாடி வீட்டையும் அவர் பெயரிலேயே உயில் எழுதி வைத்துள்ளார். மீதமிருந்த சொத்துகளையும் அவர் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து அந்த ரிக்ஷா காரர் கூறுகையில், இதை எதிர்பார்த்து செய்யவில்லை என்றாலும் முடிந்தது ஒரு வயதான தம்பதிக்கு உதவியாக நினைத்து செய்து வந்தோம். ஆனால் இப்படி ஒன்று நடக்கும் என்று கனவிலும் நாங்கள் நினைத்து பார்க்கவில்லை . அதற்காக நாங்கள் மூதாட்டியை இனிமேல் கவனிக்காமல் விடமாட்டோம். எப்போதும் போல அவரை கடைசி வரைக்கும் கவனித்துக் கொள்வோம். என்றார்.