உண்மையாக நிஜத்தில் வெற்றி பெற்ற ஜெய் பீம் - 67 குடும்பங்களுக்கு ஆட்சியர் மோகன் பட்டா வழங்கினார் - குவியும் பாராட்டு
விழுப்புரம் மாவட்டத்திலிலுள்ள 67 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு பட்டா வழங்கி இருக்கிறார்.
சூர்யா நடிப்பில் நவம்பர் 2ம் தேதி ஆன்லைனில் வெளிவந்த படம் ஜெய் பீம். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கினார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்தது. இப்படம் மொழிகளை கடந்து பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
பழங்குடியின இருளர் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், சாமானியனுக்கு கிடைக்க வேண்டிய நீதி எப்படி போராடி பெற வேண்டியுள்ளது என படத்தை உயிரோட்டமாக படத்தை இயக்கி உள்ளார் ஞானவேல்.
இப்படம் வெளியாகி பலத்த பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் வருவது போல அடிப்படை வசதிகளுக்காக கஷ்டப்படும் பழங்குடி இருளர் மக்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடி இருளர் மக்கள் வாழும் பகுதிக்கு ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டார். அதில், 67 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆணை பிறப்பித்திருக்கிறார்.
ஒரு படத்தின் வெற்றி எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும். சில படங்கள் எவ்வளவு விருதுகளை பெற்றது என்பது பொறுத்து நிர்ணயம் செய்யப்படும். ஆனால், ஜெய் பீம் போன்ற சில படங்களே திரையில் பேசியதை நிஜத்தில் நிகழ்த்திக்காட்டி உண்மையான வெற்றியை பதிவு செய்துள்ளது. அப்படிப்பட்ட உண்மையான வெற்றியை கொடுத்த இயக்குனர் ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர் ஜோதிகா – சூர்யாவுக்கும் இன்னும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.