‘ஏன் குடித்து விட்டு வருகிறாய்?’ - தட்டிக் கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்
மது குடிப்பதை தட்டிக் கேட்டதால் முதியவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தரமணியைச் சேர்ந்தவர் துரைசாமி (67). இவரது மனைவி வேம்பாள் (66). துரைசாமிக்கு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால், கணவன், மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் துரைசாமி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திரக்கிறார். அப்போது, வேம்பாள், துரைசாமியிடம் குடித்தத்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகமானது.
இதனால், ஆத்திரமடைந்த துரைசாமி கத்தியை எடுத்து வேம்பாளை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். வேம்பாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அப்போது, வேம்பாள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே தரமணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து துரைசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.