சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் மரணம்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. ஆங்காங்கே மரங்களும் சாலையில் சாய்ந்து கிடப்பது போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கவிதா (40) என்ற காவலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு விழுந்த மரத்தை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பெண் காவலர் உயிரிழந்ததை அறிந்து தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.