'ஜாமீன்' கிடைத்தும் நேற்று இரவை சிறையிலேயே கழித்த ஆர்யன்கான்
ஜாமீனில் விடுவிப்பதற்கான ஆவணங்கள் சிறை நிர்வாகத்திற்கு உரிய நேரத்தில் வந்து சேர்க்காததால், ஆர்யன் கான் நேற்று இரவு பொழுதும் சிறையில் இருக்க நேர்ந்தது.
சொகுசு கப்பலில், போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, இவர்கள் அனைவரும் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்கள். கடந்த 25 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. ஜாமீன் நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்டிருந்தது. உத்தரவாதமாக 1 லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்றே அவர் ஜாமீனில் வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், உரிய நேரத்திற்குள் ஜாமீன் உத்தரவு சிறை நிர்வாகத்திற்கு வந்து சேராததால் ஆர்யன் கான் நேற்று விடுவிக்கப்படவில்லை. நேற்று இரவு முழுவதும் அவர் சிறையில் கழிக்கவேண்டி இருந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் விடுவிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.