‘இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது..’ - எதிர்ப்பு தெரிவித்த நபரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்
உத்தரகண்டில் பொது வெளியில் சிறுநீர் கழிக்க எதிர்ப்பு தெரிவித்த நபரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்டில் டேராடூனின் ராஜ்புட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு, நிதின் குமார் லோஹன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வந்துள்ளார். அந்த கடையை புனீத் கரோலா என்பவர் தன் நண்பருடன் நடத்தி வருகிறார்.
கான்ஸ்டபிள் நிதின் குமார், அந்த கடையில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, அருகில் உள்ள திறந்த வெளியில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதைப் பார்த்த புனீத், அங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நிதின், தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் புனீத்தை சட்டென்று சுட்டுவிட்டார். வயிற்றில் குண்டு பாய்ந்து காயமடைந்த புனீத், அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார்.
இதைப் பார்த்ததும் நிதின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் புனீத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.