21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது - வனத்துறையினருக்கு மக்கள் பாராட்டு
கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி வந்த டி23 என்ற பெயரிடப்பட்ட புலி பிடிபட்டது.
நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் ஆட்கொல்லி புலி தப்பித்து சென்றது. மசினிகுடியில் புலிக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் புலியை வனத்துறையினர் பிடித்து உள்ளனர்.
மசினகுடியில் புலி சாலையை கடப்பதைக் கண்ட வனத்துறையினர் பின்தொடர்ந்து சென்று இரண்டாவது மயக்க ஊசியை செலுத்தினர். புலி பிடிக்கும் பணியில் இரண்டு கும்கி யானைகள், காவல்துறையின் பல மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன. டி23 புலி இதுவரை 4 பேரையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளது.
இந்நிலையில், 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லை புலியை வனத்துறையினர் சிரமப்பட்டு பிடித்துள்ளதால் அப்பகுதி மக்கள் வனத்துறையினரை பாராட்டியுள்ளனர்.