சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு

samugam
By Nandhini Oct 14, 2021 06:21 AM GMT
Report

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி. இவர்களுக்கு சண்முகபாண்டி என்கிற மகனும், தர்ஷினி என்கிற மக்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அந்த பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு அவர்கள் சிக்கன்கிரேவி வாங்கி வந்தனர். வீட்டில் செய்து வைத்திருந்த உணவுடன் சிக்கன் கிரேவியை வைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, லேசான வயிர் எரிச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி கற்பகவல்லி மற்றும் அவரது மகள் தர்ஷினி இருவரும் அருந்தினார்கள். அதன்படி குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர்களது உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் தாய் மற்றும் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது, இச்சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் குளிர்பானம் மற்றும் கிரேவி வாங்கிய கடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் குளிர்பானம் பாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ய அனுப்பி வைத்திருக்கிறார்கள். சிக்கன் கிரேவி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். 

சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு | Samugam