நடுரோட்டில் உயிருக்கு போராடிய பெண்,சொந்த காரில் அனுப்பி விட்டு காத்திருந்த எம்.எல்.ஏ
சாலையில் அடிபட்டு உயிருக்கு துடிதுடித்த பெண்ணை தனது காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் மீண்டும் கார் திரும்பி வரும் வரைக்கும் சாலையிலேயே காத்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னதுரையின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சின்னத்துரை. இவர் கந்தர்வகோட்டை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு காரில் சென்றார்.
அப்போது கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் ஒரு பெண் அடிபட்டு உயிருக்கு துடித்துடித்துக் கொண்டிருந்ததை பார்த்தார். உடனே காரை நிறுத்தச் சொன்னார்.
கீழே இறங்கிச் சென்று விசாரித்தார். அந்தப் பெண் கந்தர்வகோட்டை சேர்ந்த மணிமேகலை (60) என்பதும் , கூலி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், சாலையை கடந்து சென்றபோது வாராப்பூரைச்சேர்ந்த இளைஞர் மதுபோதையில் பைக்கில் வேகமாக வந்து மோதியதில் படுகாயம் அடைந்து சாலையில் துடித்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்தது.
இதனையடுத்து, உடனே அந்தப் பெண்மணியை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு தனது காரிலேயே அனுப்பி வைத்தார். கார் திரும்பி வரும் வரையில் காத்திருப்பதாக சொல்லியிருக்கிறார். காரில் அந்த பெண்ணை அழைத்துச் சென்ற பிறகு, கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கும் காவல் நிலையத்திற்கும் இதுகுறித்து போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, மணிமேகலை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதற்கிடையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய இளைஞரை கைது செய்தனர்.
மணிமேகலையை மருத்துவமனை அனுமதித்துவிட்டு திரும்பி வரும் வரைக்கும் சாலையிலேயே காத்திருந்த எம்எல்ஏவின் மனிதாபிமான செயலை அப்பகுதியில் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.