1 வயதில் மாயமான தாய் - 22 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்த மகன் - நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
கேரளாவில் பிறந்து ஒரு வருடத்தில் மாயமான தாயை கடும் போராட்டங்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (22).
இவர் தனியொருவராக போராடி தன் தாயை கண்டுபிடித்துள்ளார். அஸ்வின் பிறந்த ஒரு ஆண்டில் தந்தைக்கும், தாய்க்கும் குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து, அஸ்வின் தந்தை பராமரிப்பில் வளர்க்கப்பட்டார்.
ஆனால், சிறு காலத்திலேயே தந்தை தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதன் பின்னர், தந்தை வழி பாட்டியான விசாலாட்சி என்பவரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். அஸ்வினுக்கு 16ம் வயது ஆகும்போது, பாட்டி இறந்து போனதால், பாட்டியின் மறைவுக்கு பின்னர் மொத்தமாக ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் அஸ்வின். 10ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் வெற்றிபெற்ற அஸ்வின் 12ம் வகுப்பில் இணைந்த நிலையிலேயே பாட்டி உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து, ஒரு மேஜிக் நிபுணராக வேண்டும் என்ற ஆசை அஸ்வினுக்கு வரவே, கேரளாவின் பிரபல மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாடு என்பவரின் நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் அஸ்வினின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது.
கோபிநாத் முதுகாடின் நிறுவனத்தில் வாய்ப்பு தேடிச்சென்ற அவருக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் நம்பிக்கை இழக்காத அஸ்வின், திருவனந்தபுரம் நகரிலேயே தங்கியிருந்து, பிழைப்புக்காக காலியான பீர் போத்தல்களை சேகரித்து விற்று வந்துள்ளார்.
இந்நிலையில் 2016ம் ஆண்டு முதுகாடு நிறுவனத்திலிருந்து அஸ்வினுக்கு அழைப்பு வந்தது. அதன் பிறகு அஸ்வின் வாழ்க்கையை அந்த அழைப்பு மாற்றியமைத்தது. அதன் பிறகு, அவர் தாயாரை தேடும் பணியில் இறங்கினார்.
பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு அகதிகள் முகாமில் 44 வயதில் தாய் தங்கியிருப்பதாக அஸ்வினுக்கு தகவல் கிடைத்தது. உடனே, தாயாரை நேரடியாக தேடிச் சென்று சந்தித்தார். ஆனால், முதலில் அஸ்வினை பார்த்த அவரது தாயார் அஸ்வின் யார் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, தாயாருக்கு உரிய சிகிச்சைகள் செய்ய அஸ்வின் ஏற்பாடு செய்து வருகிறார்.