இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய வீராங்கனை - இன்று ரூ.205க்கு தினக்கூலி வேலை பார்க்கும் அவலம்!
அன்று இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய வீராங்கனை இன்று ரூ.205 சம்பளத்தில் தினக்கூலியாக வேலை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனக்கு ஏற்பட்ட நிலைமை வேற எந்த வீரருக்கும் ஏற்படக்கூடாது என்று வேதனை தெரிவித்துள்ளார் வீராங்கனை பிங்கி கர்மாகர்.
அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிங்கி கர்மாகர். இவர் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியவர்.
17 வயதான பிங்கி கர்மாகர் அப்போது லண்டனிலிருந்து தாயகம் திரும்பியபோது, மேளதாளத்துடன் அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரும், முன்னாள் அசாம் முதல்வருமான சர்பானந்த சோனாவால், விமானநிலையத்திற்கே சென்று பிங்கி கர்மாகரை அழைத்து சென்றார்.
அதன் பிறகு, பிங்கி கர்மாகருக்கு அரசு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் அவருக்கு உதவவில்லை. தாயின் மறைவுக்கு பின்னர் வயதான தந்தை மற்றும் இரண்டு தம்பிகளை காப்பாற்றும் பொறுப்பு பிங்கி கர்மாவுக்கு வந்ததால், பார்பூரா தேயிலை தோட்டத்தில் ரூ.167க்கு தினக்கூலி வேலைக்கு சென்றார். தற்போது அவருக்கு ரூ.205 தினக்கூலி வாங்குகிறார். தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டே பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
இது குறித்து பிங்கி கர்மாகர் கூறுகையில், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இரண்டு ஒலிம்பிக் நடைபெற்று விட்டன. 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், நான் இருக்கிறேனா இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியாது. நாட்டுக்காக பெருமை தேடித்தந்த எனக்கு இந்த நாடு எதுவும் செய்யவில்லை. வில்வித்தையில் பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்கிற கனவும் கனவாகவே உள்ளது. எனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை வேறு எந்த விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றார்.