உலககோப்பை வென்ற கிரிக்கெட் வீரர் - வறுமையால் ரூ.250க்கு கூலி வேலை பார்க்கும் அவல நிலை!
உலக கோப்பில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த வீரர் நரேஷ் தும்டா, தற்போது ரூ.250க்கு கூலி வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் நடந்தது. துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. இந்த அணியில் இடம்பெற்று விளையாடியவர்தான் நரேஷ் தும்டா.
உலக கோப்பை வென்று இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நரேஷ் தும்டா. இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உலக கோப்பையில் வெற்றி பெற்றதால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார் நரேஷ் தும்பா.
ஆனால், இதுவரைக்கும் இவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. மேலும், அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகைகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏமாற்றம் அடைந்தார். எந்த வேலையில் கிடைக்காததால், குஜராத் முதல்வருக்கு 3 முறை கோரிக்கை வைத்தார். அப்படியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால், குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. குடும்பத்தின் வறுமை நிலையை சமாளிக்க வேறு வழியில்லாமல், ரூ.250க்கு கூலி வேலை பார்த்து வருகிறார். மிச்ச நேரங்களில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்.
வறுமை நிலையினால் கூலி வேலைக்கு சென்றுவிடுவதால், அடுத்த உலக கோப்பைக்கு தயராக பயிற்சி எடுக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நரேஷ் தும்டா.
தனதுக்கு ஏதாவது ஒரு அரசு வேலை கொடுத்தால் குடும்பத்தின் வறுமை நிலை மாறும். அடுத்த போட்டிக்கும் தயாராவேன். அதற்கு உதவி செய்யவேண்டும் என்று பிரதமருக்கும் கோரிக்கை விடுத்து காத்திருக்கிறார் நரேஷ் தும்டா.