21 ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்த தம்பதியை சேர்த்து வந்த உச்சநீதிமன்றம்! நெகிழ்ச்சி சம்பவம்

samugam
By Nandhini Jul 31, 2021 07:41 AM GMT
Report

ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி 1998-ல் திருமணம் செய்தனர். பிறகு இந்த தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் இறந்த நிலையில் 2000ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். வரதட்சணை கேட்டு தன்னை கணவனும், மாமியாரும் துன்புறுத்துவதாக கூறி 2001ம் ஆண்டு போலீசில் மனைவி புகார் கொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கணவனுக்கு ஒரு ஆண்டு சிறையும், அபராதமும் விதித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கணவன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கணவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது. இதனையடுத்து, விவாகரத்து கோரி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார்.

கணவனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனைவியும் மனு தாக்கல் செய்தார். வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், 21 ஆண்டுகள் கழித்து, இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் வந்தது. இந்த வழக்கு ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நடைபெற்றது.

அப்போது மனு தாக்கல் செய்த பெண் நீதிபதிகள் முன் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள் கூறுகையில், உங்கள் கணவரை நீங்கள் சிறையில் அடைப்பதால் உங்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகுது. சிறையில் அடைக்கப்பட்டால் கணவரின் வேலை பறிபோய் விடும். அதன்பின் அவரால் உங்களுக்கு ஜீவனாம்ச தொகை எப்படி வழங்க முடியும். இதற்குப் பதில் கணவரை மன்னித்து சேர்ந்து வாழுங்கள். அப்போதுதான், உங்கள் குழந்தையையும் நன்றாக வளர்க்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

இதை கேட்ட பெண் மனம் மாறினார். கணவருக்கு சிறை தண்டனை வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றக்கொள்வதாக கூறினார்.

விசாரணையின் போது ஆஜரான கணவனும், மனைவியை விவாகரத்து செய்ய தொடர்ந்த வழக்கை திரும்ப பெற சம்மதம் தெரிவித்துக் கொண்டார்.

இதனையடுத்து, 21 ஆண்டுகளுக்குப் பின் தம்பதிகள் இருவரும் மீண்டும் இணைந்து கொண்டனர். 

21 ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்த தம்பதியை சேர்த்து வந்த உச்சநீதிமன்றம்! நெகிழ்ச்சி சம்பவம் | Samugam