பட்டப்பகலில் பயங்கரம் - சாலை ஓரம் வாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொலை - வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

samugam
By Nandhini Jul 29, 2021 12:13 PM GMT
Report

ஜார்க்கண்டில் சாலையின் ஓரம் வாக்கிங் சென்ற மாவட்ட நீதிபதி, ஆட்டோ ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் என்பவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே நேற்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு பின்புறமாக வந்த ஆட்டோ ஒன்று சாலையின் ஓரத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நீதிபதியை மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. ஆட்டோ மோதிய வேகத்தில் நீதிபதி உத்தம் ஆனந்த் சாலையின் ஓரத்தில் சுருண்டு விழுந்தார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

ஆனால், மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் நீதிபதி உத்தம் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் கூறினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, நீதிபதியின் மரணம் விபத்து எனக் கருதப்பட்டு வந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த வீடியோ காட்சியை பார்த்த போலீசார், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனது கணவரை ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தம் ஆனந்தின் மனைவி கிருதி சின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில், நீதிபதியின் மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.