ரத்தம் சொட்ட சொட்ட உதடுகளை தைத்து, கை கால்களை கட்டி ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட முதியவர் - அதிர்ச்சி சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தைக்கப்பட்ட நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் கட்டப்பட்டிருந்த முதியவரை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வாய்ப்பகுதி தைக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் முதலில் அதனை அகற்றி அவருக்கு சிகிச்சை கொடுத்தனர்.
சிகிச்சையில் இருக்கும் முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்ன தகவல் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.
முதியவரின் பெயர் போலா ராம் (65). இவர் பாலாமு மாவட்டம் பிதிஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர். முதியவருக்கு வளர்ப்பு மகன் உள்ளார். இந்த வளர்ப்பு மகன் தான், அவரது கூட்டாளியுடன் சேர்ந்து முதியவரை கடுமையாக தாக்கி உள்ளான்.
மேலும், முதியவரின் உதடுகளை துடிதுடிக்க கயிற்றால் தைத்துள்ளான். கை கால்களை கட்டி ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு சென்று, ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஸ்லீப்பர் கட்டையுடன் முதியவரை கட்டிப்போட்டுள்ளான். ரயிலில் முதியவர் அடிப்பட்டு சாகட்டும் என்ற எண்ணத்தில் இப்படி அவன் செய்துள்ளான்.
அதிகாலையில் முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் கட்டப்பட்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், நல்ல வேளையாக இந்த தடத்தில் ரயில் எதுவும் வரவில்லை. அதனால் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவத்தில் முதியவரின் 2-வது மனைவிக்கும் தொடர்பு இருப்பாக கூறப்படுகிறது.
அவரது முதல் மனைவி 2010-ம் ஆண்டு இறந்துவிட்டார். இரண்டாவது மனைவியுடன் இவருக்கு சண்டை வந்துள்ளது. இந்த விவகாரம் பஞ்சாயத்து வரை சென்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்றனர்.