ஒன்றிய அரசுக்கு எதிராக பேசிய பெண் இயக்குனர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு - நடந்தது என்ன?

samugam
By Nandhini Jun 11, 2021 08:02 AM GMT
Report

லட்சத்தீவில் கொரோனாவை ஒன்றிய அரசு பரப்பியதாக கூறிய பெண் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.

சமீப காலமாக சமூகவலைத்தளத்தில் லட்சத்தீவுக்கு ஆதரவாக பல ஹேஸ்டாக்குகள் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு லட்சத்தீவுக்கு புதிய நெருக்கடிகளை கொடுத்து வருவதாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என கேரள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். லட்சத்தீவில் ஒன்றிய அரசு நில உரிமைகள் தொடர்பாக பல விதிகளில் மாற்றம் செய்ய உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

லட்சத்தீவிலிருந்து கேரளாவுக்கு நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்து, இனி கேரளாவிலிருந்து மங்களூருவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு கேரள அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட மலையாள பெண் இயக்குநர் சுல்தானா பேசுகையில், லட்சத்தீவில் இதுவரை கொரோனா பரவல் இல்லாமல் இருந்தது. தற்போது லட்சத்தீவில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஒன்றிய அரசுதான் லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு காரணம் என்று பேசினார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

இதனையடுத்து, லட்சத்தீவைச் சேர்ந்த பாஜக தலைவர் அப்துல் காதர், பெண் இயக்குநர் சுல்தானா மீது கவரட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது 124A மற்றும் 153B உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் இதுதொடர்பாக ஆயிஷா சுல்தானாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.