பணம் பறித்துச் சென்றதாக போலீசாருக்கு பொய் புகார் கொடுத்த சகோதரர்கள் கைது!
திருக்கோவிலுார் அருகே எங்களை வழிமறித்து ரூ.1 லட்சத்தை யாரோடு பறித்துச் சென்று விட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தகவல் கொடுத்த சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் கவியரசன் (30). இவர் லாரி டிரைவர். இவரது தம்பி அசோக் (27). இவர்கள் இருவரும் லாரியில் ஊருக்குச் சென்றுக்கொண்டிருக்கும் போது, யாரோ, பைக்கில் வந்த 4 பேர் வழிமறித்து ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டதாக நேற்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்கள்.
உடனே இந்த புகாரைப் பதிவு செய்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., ராஜூ, இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இவர்கள் இருவரும் கொடுத்த புகார் பொய் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீசார் புகார் கொடுத்த சகோதரர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் எங்களுக்கு முன்விரோதம் உள்ளது. அதனால், அவர்களை போலீசில் சிக்க வைப்பதற்காக இப்படி ஒரு பொய்யை சொன்னதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இரு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.