ஊடகங்களை நாயோடு ஒப்பிட்ட நடிகை சமந்தா - பெருகும் எதிர்ப்பு
ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக மீம் ஒன்றை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் ட்விட்டரில் கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார். இது ஊடகங்களில் சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது பிறந்தநாளை நாகார்ஜூனா கொண்டாடினார். இதற்கு சமந்தா வாழ்த்து சொல்லாவிட்டால் விவாகரத்து நிச்சயம் என பலரும் நினைத்த நிலையில், உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்பொழுதும் உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக மீம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகங்கள் குறித்து கூறப்படுவது என்றும். அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.