நான் வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் குடியேறுகிறேனா?”: நடிகை சமந்தா விளக்கம்
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வரும் நிலையில் சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார்.
இந்த நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S' என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தியை பரப்பியது.
அதேசமயம், தற்போது ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருவதால் ‘s’என மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.இந்த நிலையில், சமந்தா விவாகரத்து செய்யவிருப்பதால் மும்பையில் சென்று குடியேறுகிறார் என்று வதந்தி பரவியது.
இதுகுறித்து, இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ”நீங்கள் உண்மையில் மும்பைக்கு செல்கிறீர்களா?” என்று கேட்டதற்கு "இந்த வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குத் தெரியாது. ஆனால், மற்ற நூறு வதந்திகளைப் போல, உண்மை இல்லை. ஹைதராபாத் என் வீடு, எப்போதும் என் வீடு. ஹைதராபாத் எனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறது. நான் தொடர்ந்து இங்கு மகிழ்ச்சியாக வாழ்வேன்” என்று கூறியுள்ளார்.