திருவண்ணாமலை அருகே புதிதாக சமணர் படுகைகள் கண்டுப்பிடிப்பு
அய்யம்பாளையம் சமணர் குகையில் 6 படுகைகள் இருப்பது கண்டெடுக்கபட்டுள்ளன.தற்போது கண்டெடுக்கப்பட்ட சமணர் படுகைகளுடன் சேர்த்து மொத்தம் 12 சமணர் படுகைகள் உள்ளது..
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் 6 சமணர் படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை செயலாளர் முனைவர் அமுல் ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
'பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மலை மீது ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயிலுக்கு தெற்கு திசையில் இரு பாறைகளுக்கு நடுவே குகை உள்ளது எனவும்,
அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் சென்னை, பெரும்பாக்கம் அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவரான கவிஞர் பச்சையப்பன் தெரிவித்தார்.
மேலும் அவர், அக்குகையை சாமியார் குகை என அழைக்கபடுவதாகவும், அதன் உள்ளே சென்றால் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அக்குகையை நாங்கள் ஆய்வு செய்தபோது, மூன்று சமணக் கற்பாழிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்தகுகைக்கு மேலே உள்ள பாறை மீதும் மூன்று சமணர் படுக்கைகள் வெட்டப்பட்டிருப்பது உறுதியானது.
இரு பெரிய பாறைகளுக்கு நடுவே உள்ள சமணக் குகையின் நுழைவிடம் ஒரு சிற்றாலயம் போன்ற தோற்றத்தில் உள்ளது. நீளமான கருங்கல் சுவரும், நான்கு அடி உயரம்கொண்ட சிறிய வாயிலும் செதுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
வாயிலின் உள்ளே சென்றால், ஒரு பம்பரத்தின் அடியைப் போல, கீழ்புறம் குறுகலாகவும், மேற்புறம் அகன்றும் உள்ள ஒரு பெரிய பாறையைக் காணலாம்.
இதன் தரைப்பரப்பில் வடக்கு நோக்கி 3 படுகைகள் வெட்டப்பட்டு இருந்தது. இந்த சமணப் படுகைகள் சற்று ஆழமில்லாமல், செதுக்கப்பட்ட நிலையிலேயே அதன் பழமையை வெளிப்படுத்துகிறது.
குகையின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சுவர் கனப்பரிமாணம், அதன் வாயிலின் வெளிப்பகுதியில், இரு அனுமன் மற்றும் கருடாழ்வார் சிற்பங்களும், அதன் அருகில் தெளிவின்றி, தொடர்ச்சியற்று காணப்படும் கல்வெட்டுகளும் உள்ளன.
இதன்மூலம் இச்சுற்று சுவரானது கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதமுடிகிறது. ஆனால், குகையின் உள்ளே வெட்டப்பட்டுள்ள சமணப்படுகைகள் இதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக அறியமுடிகிறது.
சமணக்குகையின் வெளிப்புற தரைதளத்தில் உள்ள பாறையில், மருந்து அரைக்கும் குழி ஒன்றும் உள்ளது. இக்குகையின் மேல்தளமாக உள்ள பாறைக்கு மேற்புறமாக மூன்று கற்படுகைகள் உள்ளன.
இவை மெலிதான செதுக்கல் கொண்டுள்ளன. அய்யம்பாளையம் சமணர் குகையில் 6 படுகைகள் இருப்பது கண்டெடுக்கபட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது கண்டெடுக்கப்பட்ட சமணர் படுகைகளுடன் சேர்ந்து மொத்தம் 12 சமணர் படுகைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் சமணர் அடையாளங்கள் அதிகளவு காணப்படுவது சிறப்பாகும். அக்காலத்தில் சமணத் துறவிகளை மன்னர்கள் மதித்து வந்துள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சமணக் குகையின் கட்டிடச் சுவர்கள் சிதைந்துள்ளன. எனவே, அதனை சீரமைத்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.