தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் போராட்டம்
தமிழகம் முழுவதும் முடிதிருத்துவோர் இன்று சலூன் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. இதற்கு மாநில இணைச்செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மருத்துவர் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடும், சமூக பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி சுமார் 5 லட்சம் சலூன் கடைகளை மூடி போராட்டம் நடத்த முடிவெடுத்தது. அதனையடுத்து, 26ம் தேதியான இன்று மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு, தங்களது சமூக மக்களுக்கு தனி சட்ட பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் முடிதிருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் சலூன் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. அத்துடன் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்கள்.