சாலமன் பாப்பையா மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

By Fathima Sep 11, 2026 12:48 PM GMT
Report

திமுக தலைவர் முக ஸ்டாலின்: ‘சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா திகழ்ந்தார்.

பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.

கருணாநிதி மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.

கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது. தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): "மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி): “தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்கின்ற உலக நாடுகள் பலவற்றிலும், அறிவுக்கு விருந்து படைக்கும், இலக்கிய சுவைமிகுந்த, பட்டிமன்றங்களை நடத்தி, தமிழும், பேச்சுக்கலையும் வளர்த்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் அரும்பணிகள் போற்றுதற்குரியது.

எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மறையாம் திருக்குறளுக்கு எளிய தமிழில் உரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.”

பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): “தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், நகைச்சுவை கலந்த தமிழ் நடையாலும், பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும் தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், பதிப்பாசிரியர், தமிழ்ப் பேராசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு தமிழ் சமூகத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்.

தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழ் மொழி மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். திரைப்படங்களிலும் நடித்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.