முன்னாள் காதலியின் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் பரிசளித்த சல்மான் கான்? - வெளியான புதிய தகவல்
சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட பாலிவுட் நடிகை கத்ரீனா ஃகைப்புக்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் பல கோடி மதிப்புள்ள பரிசுகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் நடைபெற்றது.
திருமணத்துக்காக மணமக்கள் தங்கிய சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.8 லட்சம், திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றது என திருமணம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.
இந்த நிலையில் தற்போது இவர்களது திருமணத்திற்கு பரிசாக வந்த பொருட்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் பிரபல பாலிவுட் நடிகரும், கத்ரீனா கைப் உடன் பல வெற்றி படங்களில் இணைந்து நடித்த சல்மான் கான், கவுசல் -கத்ரீனா ஜோடியின் திருமண பரிசாக 3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ரன்பீர் கபூர் , இவர்களது திருமண பரிசாக 2.5 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை பரிசளித்துள்ளார் என்ற தகவலும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.