சல்மான் கான், சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்கள் திருட்டு...? எலான் மஸ்க்குக்கு பேரிடி...!
சல்மான் கான், சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பதாக வெளியான தகவல் எலான் மஸ்க்குக்கு பேரிடி விழுந்துள்ளது.
40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்கள் திருட்டு
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பிரபல நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்களை திருடி விற்பனைக்கு வைத்துள்ளதாக ஹேக்கர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சமூக ஊடகமான டிவிட்டரை, உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அவரது அதிரடியான பல முடிவுகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். டுவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது மஸ்க்குக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
சல்மான் கான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க பாடகர் சார்லி புத் மற்றும் பல முக்கிய கணக்குகளின் டுவிட்டர் தரவு ஹேக்கர்களால் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 400 மில்லியன் ட்விட்டர் பயனாளர்களின் தரவுகளை திருடியதாக கூறும் ஹேக்கர், டுவிட்டருக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.
இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக் தெரிவிக்கையில், ஹேக்கரால் திருடப்பட்ட டுவிட்டர் பயனர்களின் தரவுகளில் மின்னஞ்சல்கள் மற்றும் உயர்மட்ட பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பேரழிவு தரக்கூடிய தகவல்கள் உள்ளன.
தரவு கசிவு குறித்த தகவலை ஹேக்கர் படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "+400 மில்லியன் தனிப்பட்ட டுவிட்டர் பயனர்களின் தரவை நான் விற்பனை செய்கிறேன். இந்தத் தரவு முற்றிலும் தனிப்பட்டது.
எலோன் மஸ்க், நீங்கள் இந்த இடுகையைப் படிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்கனவே 54 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவு கசிவுக்காக GDPR அபராதம் விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளீர்கள். இப்போது 400 மில்லியன் பயனர்களின் தரவு கசிவுக்கு அபராதம்" என்று ஹேக்கர் பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
