“கோலி ஒரு ஜாம்பவான், அவரை மரியாதை இல்லாம நடத்துறது சரியில்ல” - கொந்தளிக்கும் பாகிஸ்தான் வீரர்

viral virat kohli comments pakistan player salman butt virat captaincy
By Thahir Dec 12, 2021 09:50 AM GMT
Report

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை திடீரென நீக்கிய பிசிசிஐ.,யின் முடிவை முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக திடீரென அறிவித்திருந்தார்.

இதனால் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியை மிக சிறப்பாக ரோஹித் சர்மா வழிநடத்தியதால், விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ., திடீரென அறிவித்தது.

முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட், விராட் கோலியை திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பிசிசிஐ.,யின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து சல்மான் பட் பேசுகையில்,

“டி.20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பிசிசிஐ., விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக நிர்பந்திக்கவில்லை.

ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு கேப்டனும், டி.20 போட்டிகளுக்கு ஒரு கேப்டனும் இருப்பது எந்த அணிக்கும் நல்லதல்ல.

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது சரியான முடிவு தான் என்றாலும், பிசிசிஐ., இந்த விசயத்தை கையாண்ட விதம் ஏற்புடையதாக இல்லை.

48 மணி நேரத்திற்குள் விராட் கோலி தானாக கேப்டன் பதவியில் இருந்து விலகிகொள்ள வேண்டும் என பிசிசிஐ., கெடு விதித்ததாக வெளியான தகவல்கள் அதிர்சியை ஏற்படுத்தியது.

விராட் கோலி இந்திய அணிக்காக இத்தனை வருடங்கள் செய்துள்ளதை நினைத்து பார்த்தாவது இந்த விசயத்தை பிசிசிஐ., மென்மையாக கையாண்டிருக்க வேண்டும்.

விராட் கோலி போன்ற ஒரு ஜாம்பவான் மரியாதை குறைவாக நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.