கோலி மிகச்சிறந்த கேப்டன் : மனதாரப் பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது விராட்கோலி குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்து வந்த புஜாரா மற்றும் ரஹானே சமீபகாலமாக மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் புஜாரா கூட சில போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவித்தாலும், ரஹானே கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரஹானே சொதப்பியதாலும், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் போன்ற திறமையான வீரர்களின் வருகையினாலும் இனி புஜாரா, ரஹானேவிற்கு இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
2023ம் ஆண்டு நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டு ரஹானே, புஜாரா போன்ற வீரர்களை ஓரங்கட்டிவிட்டு அவர்களது இடத்தில் ஹனுமா விஹாரி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் தவித்து வரும் ரஹானேவிற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகுந்த உறுதுணையாக திகழ்ந்து வருவது பாராட்டக்கூடிய விஷயம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
ஒரு வீரர் மோசமாக செயல்படும் பட்சத்தில் அவரை புறக்கணிக்கவே அனைவரும் முயற்சி செய்வார்கள், ஆனால் இந்திய அணி கேப்டன் விராட்கோலி அவருக்கு ஆறுதலாகவும் பக்கபலமாக இருப்பது அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதை காட்டுகிறது. இந்திய அணி ஏன் விராட் கோலி தலைமையில் மிகச் சிறந்த அணியாக வலம் வருகிறது என்றால்,விராட் கோலி உடன் விளையாடும் வீரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதால் தான் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.