இப்பதான் அவருக்கு குடும்பம் ஞாபகம் வருதா? - சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்
தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் குவின்டன் டி காக் ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் கொண்டாடி வரும் நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் குவின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான குயிண்டன் டிகாக் இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 3,300 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 22 அரைசதமும் அடங்கும். விக்கெட் கீப்பிங்கில் 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்,அதில் 221 கேட்ச்களும் 11 ஸ்டாம்பிங் அடங்கும்.
இந்த நிலையில் குவின்டன் டி காக் ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு அணியில் விளையாடி கொண்டிருக்கும்போது பாதியிலேயே இப்படி ஓய்வை அறிவித்து விட்டால் அந்த அணிக்கு மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும். குவின்டன் டிகாக் இரண்டு மாதங்களுக்கு முன்பு லீக் போட்டிகளில் விளையாடி வந்தார் அப்போது அவருக்கு தனது குடும்பம் குறித்து ஞாபகம் வரவில்லையா இப்பொழுது தான் ஞாபகம் வந்து ஓய்வு அறிவிக்க வேண்டுமா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் சொந்த நாட்டிற்காக விளையாடுகிறீர்கள் என்று பற்று கூட இல்லாமல் இப்படி ஓய்வை அறிவித்து மோசமான செயல் என்றும் சல்மான் பட் விமர்சித்துள்ளார்.