வியாபாரியை அடித்து கொன்ற எஸ்.ஐ. பணியிடை நீக்கம் - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வாகன சோதனையின்போது காவலர் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்ததையடுத்து, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத நிலையில், ஏராளமான மதுபிரியர்கள், தருமபுரி மாவட்ட எல்லைக்குச் சென்று மது அருந்தி வருவது வழக்கமாக உள்ளது.
இதனை கட்டுப்படுத்த எடப்பட்டியில் சோதனைச்சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். நேற்று மாலை, கருமந்துறை வழியாக சென்று மது அருந்திவிட்டு திரும்பிய மளிகைக்கடை வியாபாரி முருகேசனை, காவல்துறையினர் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை லத்தியால் தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
காவலர் தாக்கியதில் மயக்கமடைந்து விழுந்த முருகேசன் முதலில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், முருகேசனை தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர் மீது கொலை
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.