இன்று நீட் தேர்வு - அச்சத்தில் அரங்கேறிய தற்கொலை: மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா?
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவன் இன்று பிற்பகல் நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கூழையுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தனுஷ், ஏற்கனவே இரண்டுமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கவுள்ளது. இதிலும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இன்று காலை தனுஷ் வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு மாணவ, மாணவிகள் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு தற்கொலை அரங்கேறியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.