அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி - ரத்தம் வழிய இறந்து கிடந்த ஜிம் உரிமையாளர்
அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் ஜிம் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஜிம் உரிமையாளர்
சேலம் கோட்டை அண்ணா நகர் தெருவை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மஹாதிர் முஹமது (36). இவர் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தினமும் தன்னுடைய உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்து கடினமாக பயிற்சிகளை மேற்கொள்வார். வழக்கம் போல் நேற்று இரவு 7 மணியளவில் ஜிம்மிற்கு வந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதிக உடற்பயிற்சி
அவருடன் உடற்பயிற்சி செய்த மற்றவர்கள் சென்ற நிலையில் இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இரவு 9 மணி ஆகியும் ஜிம்மை விட்டு வெளியே வராத நிலையில் அவரது கார் டிரைவர் ஜிம் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் இல்லாத நிலையில் சந்தேகமடைந்த அவர் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் குளித்து கொண்டிருப்பார் என நினைத்து காத்திருந்துள்ளார். ஆனால் குளிக்கும் சத்தம் கேட்காத நிலையில், கதவை தட்டிப்பார்த்துள்ளார். அப்போதும் எந்த பதிலும் வராத நிலையில் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.
உயிரிழப்பு
அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து பார்த்த போது காதில் ரத்தம் வடிய மயங்கி கிடந்ததுள்ளார். இதை பார்த்து பதறிய அவரது கார் டிரைவர், உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வந்த செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர், ஜிம்மிற்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.மஹாதிர் முஹமதுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளதும், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.