“உருட்டு..உருட்டுகள் பலவிதம்” - பில்லி சூனியம் எடுப்பதாக கூறி நகைகளை திருடி சென்ற போலி சாமியார்!
சேலத்தில் பில்லி, சூனியத்தை எடுப்பதாக கூறி தாய், மகளிடம் சாம்பிராணி புகையை போட்டு நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர், ஆயிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
இதை நன்கு அறிந்த நபர் ஒருவர் சாமியார் வேடத்தில் வந்து உங்கள் வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதாகவும் அதை எடுக்காவிட்டால் குடும்பத்திற்கு மிகப்பெரிய கஷ்டம் வந்துவிடும் எனவும் கூறி பயமுறுத்தியுள்ளார்.
இதை நம்பிய தாயும் மகளும் எப்படியாவது அதை எடுத்துவிடுங்கள் என்று அந்த போலிச் சாமியாரிடம் கூறி வீட்டினுள் அவரை அழைத்து சென்று பூஜையும் நடத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தபோது, இருவரையும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டி சொம்பில் போடச்சொல்லியுள்ளார் அந்த சாமியார்.
அதன்படி இவர்களும் நகையை கழட்டி போட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்த சாமியார் சாம்பிராணி புகை போட்டுள்ளார். வீடு முழுக்க சாம்பிராணி புகையாக மாறியுள்ளது.
புகைமூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், சொம்பிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு பேப்பரில் கல்வைத்து சுற்றி இது நகைதான் அப்புறமாக பிரித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிவிட்டார்.
அதன்பின்பு பேப்பரை பிரித்து பார்த்தபோது உள்ளே நகைக்கு பதில் வெறும் கல்தான் இருந்துள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாய், மகள் இருவரும் உடனே வெளியே வந்து போலிச்சாமியார் குறித்து அனைவரிடமும் விசாரித்துள்ளனர்.
ஆனால் அந்த சாமியார் நகையை கொள்ளையடித்துக்கொண்டு ஸ்வாகா சொல்லிவிட்டு தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து அவரக்ள் போலீசில் புகார் அளித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் திருடன் பச்சை நிற தலைப்பாகையுடன் நடந்து செல்வது தெரியவந்தது. இதைவைத்து போலீசார் அவரை தேடிவருகின்றனர்.