சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் சேலம் மாணவர் முதலிடம்!
சிஏ தேர்தவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சேலம் மாணவர் இசக்கிராஜ் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கிராஜ். இவருடைய தந்தை ஆறுமுகம். தந்தை தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். சேலத்தில் உள்ள சார்ட்டட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட்டில் இசக்கிராஜ் படித்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிஏ தேர்வு எழுதினார். இதில் 800 மதிப்பெண்ணுக்கு 553 மதிப்பெண்கள் பெற்று அவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். இவர் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்ததில் அவரது குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. இசக்கிராஜிக்கு பெற்றோர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது குறித்து இசக்கிராஜ் கூறுகையில், எனக்கு பத்தாம் வகுப்பிலிருந்து சிஏ தேர்வுக்கு பெற்றோர் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்தார்கள். நான் இந்திய அளவில் முதலிடம் பிடிப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்றார்.
இசக்கிராஜுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.