அதிமுக நிர்வாகி முகம் சிதைத்து படுகொலை - திமுக நிர்வாகி உட்பட 9 பேர் கைது
சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்
சேலம் அன்னதானப்பட்டி அதிமுக பகுதிச் செயலாளராக இருந்து வருபவர் சண்முகம். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் மண்டலக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு சமீப காலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
நேற்று இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கைது
இந்தச் சம்பவம் பற்றி தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீஸார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சண்முகம் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த அதிமுகவினர் அந்த இடத்தில் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் பின் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்கமாட்டோம் என அரசு மருத்துவமனையிலேயே அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் உறவினர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர்.
தற்போது அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பிரமுகர் சதிஷ் சேலம் மாநகராட்சியின் 55-வது வார்டு கவுன்சிலரின் கணவர் ஆவார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.