சேலம் அருகே உலகிலேயே மிகப் பெரிய 146 அடி உயர முருகன் சிலை குடமுழுக்கு விழா - பக்தர்கள் கோலாகல கொண்டாட்டம்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் இருக்கிறது. இங்கு உலகில் மிகப் பெரிய 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலுக்கு வெளிநாடு, இந்திய சுற்றுலா பயணிகள் சென்று தரிசனம் செய்து வருவார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் பத்துமலை முருகன் கோவில்தான் மிகப் பெரிய பிரபலமான முருகன் கோயிலாக விளங்கியது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சேலத்தில் அமைக்கப்பட்ட 146 அடி உயரம் கொண்ட இந்த சிலை மலேசியா, பத்துமலை முருகன் சிலையை விட பெரியது.
உலகில் மிகப் பெரிய உயரம் கொண்ட இந்த சிலையை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
ஸ்தபதி தியாகராஜன் திருவாரூரை சேர்ந்தவர். இவர் தலைமையில் மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட பிரமாண்டமாக 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இன்று உலகின் மிகப்பெரிய முத்துமலை முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 146 அடி உயரமுள்ள முத்துமலை முருகன் சிலைக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் ஆறுபடை முருகன் கோவில் குருக்கள் கலந்து கொண்ட நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் வைத்து பூஜை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகா, அரோகரா, கந்தா என முருகனின் பெயர்களை அழைத்தனர்.
முருகனின் திருமுகத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்தாலும், பாலாபிஷேகம் செய்ய நினைத்தாலும் முருகன் சிலைக்கு பின்புறம் லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.