Sunday, Jul 6, 2025

“பெண்களை இப்படி வசை பாடாதிங்க..உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார்” - சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்ற சாய்னா நேவால்

saina naval actor sidharth controversial tweet seeks forgiveness
By Swetha Subash 3 years ago
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

அண்மையில் நடிகர் சித்தார்த்தின் ட்வீட் ஒன்று கடும் விமர்சனத்துக்குள்ளானது. அந்த ட்வீட்டால் ட்விட்டரில் பெரும் பிரளயமே வெடித்துவிட்டது.

அண்மையில், பஞ்சாப் எல்லைக்குள் நுழையும் முன்பே பிரதமரின் கார் செல்லும் மூன்று வழிகளை விவசாய அமைப்புகள் முற்றுகையிட்டன.

இதனால் பாதுகாப்பு குறைபாடு எனக்கூறி அவரின் கார் டெல்லி திரும்பியது.

இது குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நாடு பாதுகாப்பாக இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

பாஜகவுக்கு ஆதரவாக அந்த ட்வீட் இருந்ததால், அதனை விமர்சிக்கும் வண்ணம் ட்வீட் செய்திருந்தார் நடிகர் சித்தார்த்.

கொச்சைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தையால் அந்த குறிப்பிட்ட ட்வீட் இருந்த்தால் அதற்கு சாய்னா கண்டனம் தெரிவிக்க, விளையாட்டு வீரர்கள், பாஜக அமைச்சர்கள் என பலரும் சித்தார்த்தை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்குப் பின் விளக்கமளித்த சித்தார்த், ட்வீட் சாய்னாவை இழிவுப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. ட்வீட்டை தவறாக சித்தரிக்காதீர்கள் என கூறினார்.

மேலும், தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி சித்தார்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து சித்தார்த் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கோரினார்.

அதில், "நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டை போட்டேன். வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த ட்வீட் தவறாக பொருள் கொள்ளப்பட்டது. உண்மையிலேயே நான் பெண்ணியவாதிகளின் ஆதரவாளர்.

நீங்கள் பெண் என்பதால் அவ்வாறு விமர்சிக்கவில்லை. நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை சாய்னாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர், "சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை.

எனக்கே ஆச்சர்யமாக தான் இருந்தது. சித்தார்த்தின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக் கூடாது.

பெண்களை இதுபோன்று வசைபாடக்கூடாது. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று கூறியுள்ளார்.