ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்கும் சைஃப் அலி கான் குடும்பம் - என்ன பிரச்சினை தெரியுமா?
சைஃப் அலி கான் குடும்பம் ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்க உள்ளது.
சைஃப் அலி கான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் நவாப்பான பட்டோடி குடும்ப வாரிசு ஆவார்.
இவர்களுக்கு அரண்மனை, நிலம் உட்பட ரூ.15,000 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் உள்ளது. போபாலின் கடைசி நவாப்பாக கருதப்படும் ஹமிதுல்லா கானின் மகள் அபிதா சுல்தான் இந்த சொத்துகளுக்கு வாரிசாக கருதப்பட்டார்.
எதிரி சொத்துகள்
ஆனால் அவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து 1950ஆம் ஆண்டு அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் தனது இந்திய குடியுரிமையை இழந்ததால் அவரது சகோதரி சஜிதா சுல்தான் அந்த சொத்துகளுக்கு வாரிசாக அறிவிக்கப்பட்டார். சைஃப் அலிகான் சஜிதா சுதனின் மகன் வழி பேரன் ஆவார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகள் இந்தியாவில் இருந்தால் அவை எதிரியின் சொத்துகளாக கருதப்படும். அதே போல் கடந்த 2014 ஆம் ஆண்டு பட்டோடி நாவப் குடும்பத்தின் சொத்துக்களை எதிரி சொத்தாக அறிவித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. எதிரி சொத்துகள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் அந்த சொத்து மத்திய அரசுக்கு சொந்தமாகிவிடும்.
நீதிமன்ற உத்தரவு
2015 ஆம் ஆண்டு மத்திய அரசின் நோட்டீஸை எதிர்த்து சைஃப் அலிகான் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததையடுத்து, மத்திய அரசின் நோட்டீஸிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, போபாலில் உள்ள நவாப் சொத்துகள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய அரசாணையை பிறப்பித்தது.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் சைஃப் அலிகான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்ததோது, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பிறப்பித்திருந்த தடையையும் நீக்கிவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் பெறலாம் என கூறப்பட்ட நிலையில், 30 நாட்கள் ஆகியும் சைஃப் அலிகான் தரப்பிலிருந்து மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு இந்த சொத்துக்களை கைப்பற்றி கொள்ளும் சூழல் உள்ளது.