தன்னுடன் உறவு கொண்டால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் - சில்மிஷ சாமியார் சிக்கியது எப்படி?
தன்னுடன் உறவு கொண்டார் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் எனக் கூறி பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சில்மிஷ சாமியார் தற்போது போலீசார் பிடியில் சிக்கியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் நல்லகொண்டா மாவட்டத்தில் உள்ள பி.ஏ.பள்ளி. இங்குள்ள அஜ்மாபூர் என்ற கிராமத்தில் ஸ்ரீசாய் சர்வஸ்வாமு சாய் மான்சி தொண்டு அறக்கட்டளையை நடத்தி வருபவர் சாமியார் சாய் விஸ்வ சைதன்யா. இவர் தன்னிடம் வரும் பணக்காரர்களிடம் சாய்பாபாவின் தீர்க்க தரிசனம் என்ற பெயரில் ஏமாற்றி பணத்தைக் கறந்துள்ளார். தன்னிடம் வரும் பெண்களை, என்னுடன் நீங்கள் உறவு கொண்டால் உங்களுக்கு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என ஏமாற்றி பல பெண்களையும் தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார்.
அது மட்டுமல்ல மூலிகை மருந்து, மூலிகை எண்ணெய், சர்வரோக நிவாரணி என்றெல்லாம் கூறி மருந்துப் பொருட்களை விற்று கல்லா கட்டியுள்ளார். இப்படி மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகள், ஏமாற்றுகள் என்று நடத்திவிட்டு சொகுசாக வாழ்ந்து வந்தார் சில்மிஷ சாமியார் சாய்விஸ்வ சைதன்யா.
இவரது வளர்சி கடந்த 10 வருடங்களில் பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு அமைந்துள்ளது. இவருடைய சொந்த ஊர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்திகாமா. கடந்த 2002 ஆம் ஆண்டு அங்கு ஒரு கணினி மையத்தை அமைத்துள்ளார். அப்போது அந்தப் பகுதி மக்களிடம் சீட்டுப் பிடிப்பதாகக் கூறி ரூ.1 கோடி வரை பணத்தை சுருட்டியுள்ளார். அப்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவருக்கு சாமியாராவதே சாலச் சிறந்த தொழில் என்று தோன்றியுள்ளது. ஏற்கெனவே ஏமாற்று கைவந்த கலையாக இருந்ததால், சாய்பாபா பக்தர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். சாய்பாபாவின் ஆசி பெற்றவர் என்று அடையாளம் காட்டிக் கொண்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்று இவரது சொற்பொழிவை அன்றாடம் ஒளிபரப்ப வெகு லாவகமாக மக்களின் வீடுகளுக்குள் தொலைக்காட்சி வழியாக சென்று சேர்ந்துவிட்டார்.
அதன் பின்னர் தான் அவரிடம் நிறைய பெண் பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்களிடம் எல்லாம், என்னுடன் நீங்கள் உறவு கொண்டால் உங்களுக்கு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என ஏமாற்றியுள்ளார். தனியாக ஒரு யூடியூப் சேனலும் ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் விழித்துக் கொண்ட சிலர் போலீஸில் புகார் கொடுக்கத் தொடங்கினர். அப்போது தான் போலீஸார் கிடுக்கிபிடி விசாரணையை ஆரம்பிக்க சைதன்யாவின் சகல லீலைகளும் வெளியே வரத் தொடங்கின.
போலீஸார் சைதன்யாவை கைது செய்துள்ளனர். அவருடன் வீடியோ எடிட்டர் கவுதம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஸ்ருஜன் குமார், வாகன ஓட்டுநர் விஜய் ஆகியோரை கைது செய்துள்ளன. சைதன்யாவிடமிருந்து 26 லட்சம் ரொக்கப் பணம், 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவருடைய இரண்டாவது மனைவியின் ரூ.1.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 லேப்டாப்கள், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சைதன்யா மீது மேலும் பல பெண்கள் புகார் அளிக்காமல் இருப்பதாக காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.