இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்கா - 2வது டெஸ்டில் அபார வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாட தொடங்கிய அந்த அணி நேற்று 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. கேப்டன் டீன் எல்கர் 46 ரன்களுடனும், டேர்டூசன் 11 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதனிடையே வான்டரெர்ஸ் மைதானத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழைக்கு பின் நடந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் விளாச 67.4 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கான இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மேலும் முதல் போட்டியில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.