மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவால் சபரிமலை கோவில் நடை அடைப்பு

Sabarimala சபரிமலை
By Petchi Avudaiappan Jan 21, 2022 12:03 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

சபரிமலையில் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து  கோவில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட முதல் நாளன்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மறுநாள் முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி அன்று புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை, ஜோதி தரிசனம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்றுடன் மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பந்தளம் அரச குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

மண்டல மகர விளக்கு சீசன் நிறைவடைந்ததை முன்னிட்டு வழக்கமான பாரம்பரிய நிகழ்வாக கோவில் சாவி மற்றும் பணக்கிழியை சங்கர் வர்மாவிடம், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஒப்படைத்தார். அதேபோல் கோவில் சாவி மற்றும் பணக்கிழியை அரச குடும்பம் சார்பில் சங்கர் வர்மா மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைத்த பிறகு பிரதான சம்பிரதாய சடங்குகள் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து 18 ஆம் படி வழியாக திருவாபரண பெட்டிகள் சன்னிதானத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி சங்கர் வர்மா தலைமையில் திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது