மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

sabarimala ayyappantemple
By Petchi Avudaiappan Dec 29, 2021 12:26 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. 

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நடந்தது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். அன்றைய தினம் மற்ற விசேஷ பூஜைகள் நடைபெறாது. பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.

மேலும் எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் எருமேலி கோழிக்கடவில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் தரிசனத்திற்கு வரும் போது கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் மகர விளக்கையொட்டி கூடுதல் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சன்னிதானத்தில் கூடுதல் அப்பம், அரவணை விற்பனை கவுண்ட்டர்கள் தொடங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.