சபரிமலை நடை திறப்பு - பக்தர்கள் அனுமதி! கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, வரும் 17ம் தேதி மாதாந்திர பூஜைகளுக்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, வரும் 17-ம் தேதி முதல் வரும் 21-ம் தேதி வரை திறக்கப்பட உள்ளது. இந்த ஐந்து நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதன்படி, நாள் ஒன்றுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது. 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான கொரோனா தடுப்பூசி சான்று பெற்றுள்ள பக்தர்களும் சபரிமலையில் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.