"இனிவரும் தினங்களில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரிக்கும்" - தென் ஆப்பிரிக்க அறிவியலாளர் எச்சரிக்கை

india explains omicron spread south africa scientist
By Swetha Subash Dec 26, 2021 07:16 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இந்தியாவிலும் ஒமைக்ரான் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இப்போதைய நிலவரப்படி 400க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சமூகப் பரவலாக மாறவில்லை. அது ஒன்றே ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது.

வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று அதிகரித்தால் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதேபோல ஹாட்ஸ்பாட்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இச்சூழலில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் எப்படி இருக்கும் என ஒமைக்ரானை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்குச் சொன்ன தென் ஆப்பிரிக்க அறிவியலாளர் மற்றும் மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி விவரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இனிவரும் தினங்களில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரிக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இதன் காரணமாக பலருக்கு தொற்று ஏற்படும்.

ஆனால் இது உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. லேசான அறிகுறிகளுடன் ஏற்படும் இந்த பாதிப்பிலிருந்து இந்திய மக்கள் விரைவில் குணமடைந்துவிடுவார்கள்.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் அதிவிரைவில் குணமடைவார்கள். ஆனால் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்களின் நிலைமை தான் கொஞ்சம் மோசம். அவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கொரோனா எனும் பெருந்தொற்று பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை அதை நம்மால் கணிக்க இயலாது. தடுப்பூசிகளால் மட்டுமே ஒமைக்ரானை கட்டுப்படுத்த முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

குறிப்பாக எத்தனை டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். முடிந்தவரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.